* பாஜவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து ரவுடிகள் மூலம் பறித்ததாக பதிவால் பரபரப்பு
மதுரை: அதிமுக மாஜி அமைச்சரின் பண்ணை வீட்டில் ரூ.200 கோடி பணத்தை பாஜவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து ரவுடிகள் மூலம் பறித்ததாக சமூக வலைதளத்தில் பாஜ பிரமுகர் வெளியிட்ட பதிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜ ஆதரவாளரான மதுரையைச் சேர்ந்த ரவிக்குமார், தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகர் பாஜ வழக்கறிஞர்களில் சிலர் கட்டப்பஞ்சாயத்துகள் செய்வதும், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்கவில்லை எனில், மதுரை பாஜவிற்கு சங்கடங்கள் ஏற்படும்.
மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தூய்மை பணி செய்தால் ஆர்எஸ்எஸ் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் பல தவறுகளை செய்யும் சுயநலவாதிகள் கட்சியை தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார்கள். இதை சில பாஜ தலைவர்கள் ஆதரிக்கிறார்கள். பாஜ பலர் உயிரை கொடுத்து வளர்த்த கட்சி. தற்போது கட்சி வளர்ச்சியடைத்த உடன் சிலர் ஆதாயம் தேடி பதவிக்கு வந்தவர்கள்.
நேற்று (ஞாயிறு) மதுரை அதிமுக பிரமுகர் ஒருவரின் பல கோடி பணத்தை ரவுடிகளை வைத்து பறித்து சென்றுள்ளனர்.
இதனால் பாஜவிற்கும், ஆர்எஸ்எஸ்க்கும் தான் கெட்டப்பெயர் ஏற்படும். இப்படி பதிவிட வருத்தமாகத்தான் இருக்கிறது. எனது மகன் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே. இதில் யார் என்மேல் வருத்தம் கொண்டாலும் கவலையில்லை (தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்). பாஜ நேர்மையான கட்சி என்றால் நடவடிக்கை எடு. மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்றால் தகுந்த ஆதாரத்துடன் உண்மைகள் வெளி வரும்.
கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுங்கள். கட்சியை வளர்ப்பதற்காக முடிச்சவிக்கி, மொள்ளமாரிக்கு பதவியை தாரை வார்க்காதீர்கள். இது பலர் உயிர் தியாகம் செய்து வளர்த்த கட்சி. அவர்கள் ஆன்மா பார்த்து கொண்டு இருக்கிறது. (தவறு இருந்தால் மன்னிக்கவும்). இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவில், மதுரை அதிமுக பிரமுகர் ஒருவரின் பல கோடி பணத்தை ரவுடிகளை வைத்து பறித்து சென்றுள்ளனர் என கூறியது, தென்மாவட்ட அரசியல்வாதிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘மதுரையைச் சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் ஒருவருக்கு மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் பண்ணைத்தோட்டம் உள்ளது. இங்கு தான் முக்கிய ஆவணங்கள், பணம் மற்றும் நகைகளை பதுக்கி வைத்துள்ளார். இதில் பெரும் பகுதி பணம் கருப்பு பணம் என்று கூறப்படுகிறது. சுமார் ரூ.200 கோடி வரை இங்கு ரொக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பணத்தை வரும் சட்டமன்ற தேர்தலில் செலவிடுவதற்காக மாஜி தயார் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மதுரையில் இருக்கும்போதெல்லாம் இந்த பண்ணை வீட்டிற்கு வந்து செல்லும் மாஜி, பணம் இருப்பதை உறுதி செய்துவிட்டு தான் செல்வாராம். கடந்த ஞாயிறன்று பெரும்பகுதி கருப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது’’ என்றார்.
மாஜி அமைச்சர் பண்ணை வீட்டில் பதுக்கிய பணத்தை நோட்டமிட்ட ஒரு கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது, அதிமுக மட்டுமின்றி பாஜ வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வரும் என கூறப்படுகிறது.
* பாஜ நேர்மையான கட்சி என்றால் நடவடிக்கை எடு. மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்றால் தகுந்த ஆதாரத்துடன் உண்மைகள் வெளி வரும்.
* மாஜி அமைச்சர் பண்ணை வீட்டில் சுமார் ரூ.200 ேகாடி வரை ரொக்கமாக கருப்பு பணம் இருந்ததாகவும், இந்த பணத்தை வரும் சட்டமன்ற தேர்தலில் செலவிடுவதற்காக மாஜி அமைச்சர் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
* முருகர் மாநாட்டில் அவசர அவசரமாக மாஜி வெளியேறியதற்கு இதுதான் காரணமா?
கடந்த 22ம் தேதி மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநாடு நடைபெற்று கொண்டிருந்தபோதே அதிமுக மாஜி அமைச்சர் ஒருவர் பதற்றத்துடன் அவசர அவசரமாக வெளியேறினார். மாநாடு நடந்த அன்றுதான் அதிமுக மாஜி அமைச்சர் பண்ணை வீட்டில் ரூ.200 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், கொள்ளையடிக்கப்பட்ட தகவல் அறிந்துதான் அவர் மாநாட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.