சென்னை: மதுரை கூடல் நகரில் ஜூன் 1ல் காலை 9 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் நாளை மறுநாள் நடக்கவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 2026 தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
பொதுக்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களை செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திட வேண்டும். திமுக அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் அவதூறுகளை பரப்பி வருகின்றன. பொய் செய்திகளை பூதாகரமாக்கி, தோல்வியில் இருந்து மீட்டெடுக்க முடியுமா எதிர்க்கட்சியினர் முயற்சி மேற்கொள்கின்றன. தனித்தனியாகவும் கூட்டணி சேர்ந்தும் திமுகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர்.
பதவி சுகத்துக்காகவே கட்சி தொடங்குபவர்கள் இன்றைய அரசியல் சூழலில் நிறைந்துள்ளனர். பதவியை காப்பாற்றிக் கொள்ளவே கட்சியை அடமானம் வைத்தவர்களும் உள்ளனர். சிறைவாசத்தை சிரித்த முகத்துடன் ஏற்று நெருக்கடி நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்ட வெற்றி இயக்கம் திமுக என்பதை நினைவில் வையுங்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.