மதுரை: மதுரையில் இன்று அதிமுக மாநாடு நடக்கிறது. இதற்காக நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். மதுரை அருகே வலையங்குளத்தில் இன்று அதிமுக எழுச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்திலிருந்து காரில் கிளம்பி, மாலை 6.10 மணிக்கு மதுரை வந்தார். திருமங்கலம் அரசு கல்லூரி அருகே முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்தனர். பின்னர் மதுரை விமான நிலையம் அருகே தனியார் விடுதியில் தங்கினார்.
இன்று காலை 8 மணிக்கு 51 அடி உயர கொடிக்கம்பத்தில் எடப்பாடி கட்சி கொடியேற்றி, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். அப்போது அவர் மீது, ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர். தொடர்ந்து, மாநாட்டு மேடையில் கவியரங்கம், பட்டிமன்றம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சிகள் மாலையில் தொடங்குகின்றன.
இறுதியாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து சிறப்பு ரயில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, நேற்று காலை 9.15 மணிக்கு மதுரை கூடல் நகர் ரயில் நிலையம் வந்தடைந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் இதில் வந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் தொண்டர்கள் வந்துள்ளனர். இதனால் மதுரை புறநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டு, பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.
சொம்பு வாங்க தள்ளுமுள்ளு: திருமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு எதிர்புறம் சர்வீஸ் ரோட்டில் மாவட்ட அதிமுக சார்பில் எடப்பாடிக்கு வரவேற்பளிக்க அழைத்து வரப்பட்ட பெண்களிடம் தேங்காய் வைத்து சொம்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. இவற்றை பெற பெண்கள் முண்டியடித்தனர். இதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயரிடம், சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அளித்த புகார் மனுவில், அதிமுக மாநாட்டில் கருப்பு பண பரிமாற்றம் நடைபெறுவதால் காவல்துறையினர் சிபிஐ, அமலாக்கத்துறைக்கு தகவலை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.