மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை பணியை கைவிடும் முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரூ.360 கோடி செலவழித்த திட்டத்ததை முடக்குவதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் 2007 – 2008 நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2011-2012 நிதியாண்டில் ரூ.143.5 கோடி நிதிஒதுக்கப்பட்டு பின்னர் திட்டமதிப்பீடு உயர்த்தப்பட்டு ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு காத்துள்ளது. இதனிடையே, திட்டத்தை விரைந்து முடிக்க எம்.பி.க்கள் வைகோ, கனிமொழி, மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன் வலியுறுத்தி வருகின்றனர்.
மதிப்பீட்டுக்கு முழு ஒப்புதல் தர இருந்த நேரத்தில் சில அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் நிறுத்திவைக்க கூறப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரின் தவறான வழிகாட்டுதலால் திட்டத்தை நிறுத்திவைக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. தென் மாவட்ட மக்களின் கனவுத் திட்டத்துக்காக இதுவரை ரூ.360 கோடி செலவிட்ட நிலையில் பாதியில் கைவிடுவதா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. திட்டத்தை கைவிட ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், வியாபாரிகள், தொழில் நிறுவனத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.