மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோயில், மல்லிப்பூ, வைகை ஆறு, கள்ளழகர் கோயில் என மதுரைக்குப் பெருமை சேர்க்கும் இடங்கள் மற்றும் பொருட்களின் நீண்ட பட்டியல்தான் நினைவுக்கு வரும். அந்த வரிசையில் பிரதானமானது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை.மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. இது 1623ஆம் ஆண்டு முதல் 1659ஆம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட மதுரையின் நாயக்க வம்சத்தின் மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட 17 ஆம் நூற்றாண்டு அரண்மனை ஆகும். மதுரை நாயக்கர்கள் 1545 முதல் 1740 வரை ஆட்சி செய்துள்ளனர்.மதுரையில் அமைந்துள்ள இக்கட்டடம் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் பாணி கட்டட கலைநயத்தில் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டடத்தின் நான்கில் ஒரு பகுதியே, தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் மதராஸ் ஆளுநராக இருந்த பிரான்சிஸ் நேப்பியர் 1866 முதல் 1872 வரை இந்த அரண்மனையைப் புதுப்பித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில் இந்த அரண்மனையும் ஒன்றாகும்.
இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனையை 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. திருமலை நாயக்கர் மகால் அதன் ராட்சத தூண்களுக்கு பிரபலமானது. தூணின் உயரம் 82 அடி (25 மீ) மற்றும் அகலம் 19 அடி (5.8 மீ) கொண்டது. கூரையில் ஒட்டிய பகுதியில் ஆங்காங்கே விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக் காட்சிகள் ஓவியமாக சித்தி ரிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில், இந்த அரண்மனை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்துள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும், மற்றொன்று அரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ‘சொர்க்க விலாசம்’ மன்னரின் வசிப்பிடமாகவும், ‘அரங்க விலாசம்’ அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்துள்ளது.
இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடகசாலை, பல்லக்குச் சாலை, ஆயுதசாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன. முற்றம் மற்றும் நடன மண்டபம் ஆகியவை அரண்மனையின் முக்கிய இடங்களாகும். செலஸ்டியல் பெவிலியன் (சொர்க விலாசம்) சிம்மாசன அறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 60 முதல் 70 அடி (18 முதல் 21 மீ) உயரமான குவிமாடத்தால் மூடப்பட்ட எண்கோணத்தைக் கொண்டுள்ளது. சுண்ணாம்பு (மருந்து சுண்ணாம்பு) பயன்படுத்தி சுன்னம் எனப்படும் நேர்த்தியான ஸ்டக்கோவில் ஃபோலியேட் செங்கல் வேலைப்பாடுகள் பயன்படுத்தி கட்டப்பட்டது.
இந்த மகால், 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 1981 ஆம் ஆண்டு முதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு, இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி காட்சி, நாள்தோறும் மாலை 6.45க்கு ஆங்கிலத்திலும், பின் இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறுகிறது.