மதுரை : மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் உள்ள அரிட்டாபட்டி கிராமம் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலமாக 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் சமணர் படுகை குடைவரை கோவில், வட்டெழுத்து கல்வெட்டு என ஏராளமான புராதன சின்னங்கள் உள்ளன. அதே போல் ராசாளி கழுகு உட்பட அரியவகை பறவைகளும் இங்கு வசித்து வருகின்றன.இந்த நிலையில், அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர் மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதித்ததாக செய்தி வெளியானது.
அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் என்னும் கனிமவளங்கள் வெட்டி எடுப்பதற்கு 2015.51 ஹெக்டரில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதாக செய்தி வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் ஒன்றிய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், மதுரை அரிட்டாபட்டி பகுதியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது, எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஆராய்ந்து வருகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.