மதுரை: ரூ.36 கோடி செலவில் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் புதிய கிரிக்கெட் மைதானம் மதுரையில் அமைக்கப்படுகிறது. மதுரை ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் கிராமம் பகுதியில், தமிழகத்தின் 2வது பெரிய கிரிக்கெட் மைதானம் உருவாகி வருகிறது. ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் வல்லுநர்கள் ஆலோசனையுடன் மின்னொளியில் பகல் இரவு ஆட்டங்கள், மழை பெய்தாலும் தடையில்லாமல் விளையாட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வடிகால் வசதியுடன் ரூ.36 கோடியில் இம்மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மைதானத்தை சுற்றி 5 அடி அளவில் மழைநீர் வெளியேறுவதற்காக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
ஆடுகளம் மற்றும் கட்டுமான பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை அடுத்து, தமிழகத்தில் அமையும் மிகப்பெரிய 2வது கிரிக்கெட் ஸ்டேடியமாக இது இருக்கும். 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பார்வையாளர் கேலரிகள் அமைக்கப்படுகிறது. வீரர்களுக்கான தங்கும் அறைகள், முதலுதவி வசதிக்காக மருத்துவமனை, கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளும் அமைகிறது. இதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மைதான நிர்வாகி, மதுரை வேலம்மாள் குழும தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், ‘சர்வதேச வீரர்கள் பங்குபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மற்றும் இந்திய அளவில் சிறந்த வீரர்களை கொண்ட தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், ரஞ்சி டிராபி போட்டிகளும் நடத்துவதற்கு வாய்ப்பாக இம்மைதானம் அமையும். கோயில் நகரான மதுரை ஒரு சுற்றுலா நகராக இருப்பினும், பொழுதுபோக்கு அம்சங்களும், விளையாட்டுத்துறைக்கான வாய்ப்புகளும் குறைவுதான். இந்த ஸ்டேடியம் உருவானால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், இந்திய போட்டிகள், உள்ளூர் போட்டிகள் இங்கு நடத்துவதற்கான நல்வாய்ப்பாக அமையும். இம்மைதானம் அமைவதால் எதிர்காலத்தில் மதுரையைச் சுற்றிலும் வர்த்தக மேம்படும், தொழில் முதலீடுகளுக்கும், விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் கூடுதல் பங்களிப்பிற்கும் வழிவகுக்கும்’ என்றார்.