Thursday, June 19, 2025
Home செய்திகள் மதுரையில் நாளை நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கூடிடுவோம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்றிடுவோம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மதுரையில் நாளை நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கூடிடுவோம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்றிடுவோம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by Ranjith

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதுரையில் திமுக பொதுக்குழு கூடுகிறது. பதவி சுகத்திற்காகவே கட்சி தொடங்குபவர்கள், பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக கட்சியையே அடமானம் வைத்தவர்கள் நிறைந்த இன்றைய அரசியல் சூழலில், சிறைவாசத்தை சிரித்த முகத்துடன் ஏற்று, நெருக்கடி நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டு கடந்த வெற்றிகரமான இயக்கமாகச் செம்மாந்து நிற்கிறது திமுக.

ஒன்றிய பாஜ அரசு நாட்டு மக்களின் நிலைபற்றி சிந்திக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் நகைக்கடன் நிபந்தனைகள் வரை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தாக்குதல் தொடுத்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களை அந்த தாக்குதலில் இருந்து காப்பாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், “ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது” என அறிவித்திருக்கிறார். ஒன்றிய அரசு வஞ்சித்தாலும், ஏழை-எளிய மக்களை மாநில அரசின் கூட்டுறவு வங்கிகள் அரவணைக்கும்.

முந்தைய ஆட்சியாளர்கள் போல பதவிக்காக, மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைக்கும் வழக்கம் திராவிட மாடல் அரசுக்கு இல்லை. நகைக்கடன் நிபந்தனைகளால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை மக்கள் நாட முடியாத நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு உதவுகிறோம். இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசின் செயல்பாடு. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத உறுதிப்பாடு.

இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. அவர்களின் மனம் நம் பக்கம் உள்ள நிலையில், தேர்தல் களம் நம் வெற்றிக்கு முரசு கொட்டி அழைக்கிறது. உடன்பிறப்புகளால் தலைவர் பொறுப்பை ஏற்றது முதல், எதிர்கொண்ட தேர்தல் களங்கள் அனைத்திலும் திமுக தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறது. சளைக்காத உழைப்பும், சரியான வியூகமும்தான் நம் வெற்றிக்கு அடிப்படை.

திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளை பரப்பி, பொய்ச் செய்திகளை பூதாகரமாக்கி தங்களை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், ரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும். நமக்கான கடமை என்ன, நம் லட்சியப் பயணத்தின் இலக்கு எது என்பதையெல்லாம் உடன்பிறப்புகளாம் உங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க திமுகவின் பொதுக்குழு மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1ம் நாள் (நாளை) கூடுகிறது. திமுகவின் தலைவர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனாகவும் பொதுக்குழு உறுப்பினர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

வீரமும் பாசமும் நிறைந்த மதுரை மண்ணில் பொதுக்குழுவா, மாநாடா என வியக்கின்ற வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மு.மணிமாறன் உடனிருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தென் மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பொதுக்குழு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

பொதுக்குழு நடைபெறும் அரங்கம், அதற்கான பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவருந்தும் இடம், தங்குமிடங்கள் என ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் அமைத்துள்ளதை நாள்தோறும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறார்கள்.  காட்சிகளையும் படங்களையும் வாட்ஸ்அப் மூலம் பார்த்து உரிய திருத்தங்களையும் தெரிவித்துள்ளேன். திமுகவின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பொதுக்குழு நடைபெற உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியதுடன், எனக்கும் அதுபற்றிய விவரங்களை தெரிவித்துள்ளார்.

ஜூன் 1 காலை 9 மணிக்கு பொதுக்குழு தொடங்குகிறது.காலை 8 மணிக்கே அரங்கத்திற்கு வந்து, பொதுச்செயலாளர் தங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைக் காட்டி, பதிவு செய்துகொண்டு, அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து, சரியான நேரத்தில் பொதுக்குழு தொடங்க உடன்பிறப்புகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பொதுக்குழு உறுப்பினர்களின் மனம் திறந்த கருத்துகள், திமுக முன்னோடிகளின் உணர்ச்சிமிகு உரைகள், இந்திய அரசியலையும்-தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கவிருக்கும் தீர்மானங்கள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய உரை என மதுரை பொதுக்குழு செறிவான நிகழ்ச்சி நிரலுடன் நடைபெற இருக்கிறது.

2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடர்ந்திட ஆற்ற வேண்டிய களப்பணிகளை தீர்மானித்திடவும், அதனை ஒவ்வொரு தொகுதியிலும் செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திடவும் திமுக உடன்பிறப்புகளை பொதுக்குழுவில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். பொதுக்குழுவில் கூடிடுவோம்! பொதுத்தேர்தலில் வென்றிடுவோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi