மதுரை : வைகை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வைகை அணை வேகமாக நிரம்பியது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2596 கன அடியாக உள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் அணையின் மதகுகளை திறந்து பாய்ந்தோடும் தண்ணீரில் மலர் தூவினர்.
மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 90,000 கன அடி வீதமும் அடுத்த 75 நாட்களுக்கு தண்ணீர் இருப்பை பொருத்து முறை வைத்து மொத்தமாக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதனிடையே வைகை அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது 33-வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.