* செயற்கை கூண்டுகள் அமைப்பு
* தண்ணீர் வசதிக்கும் ஏற்பாடு
மதுரை: மதுரை மாநகராட்சியின் எக்கோ பார்க் பறவைகளின் சரணாலயமாக மாற்றப்படும் வகையில் இனப்பெருக்கம் செய்து குஞ்சுகள் வளர வசதியாக நூற்றுக்கணக்கான செயற்கை கூண்டுகளை இயற்கை ஆர்வலர்கள் அமைத்து வருகின்றனர். மதுரை மாநகராட்சி மொத்தம் 72 வார்டு பகுதிகளாக இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு அக்டோபரில் 17 ஊராட்சிகளை இணைத்து மொத்தம் 100 வார்டுகளாக அதிகரித்தது. இதன் மூலம் மாநகராட்சி பரப்பளவு 51.82 சதுர கிலோ மீட்டரிலிருந்து 147.997 சதுர கி.மீட்டராக அதிகரித்துள்ளது. மக்கள் தொகையும் 10.50 லட்சத்திலிருந்து 14.70 லட்சமாக உயர்ந்துள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தூய்மைப்பணிகள், புதிய சாலைகள், குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மழைநீர் வடிகால் கட்டமைப்பு.
தெருவிளக்குகள் பராமரிப்பு, பள்ளிக்கட்டிடங்கள் புனரமைப்பு, மருத்துவமனைகள் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நமக்குத் நாமே திட்டம். தனியார் வங்கிகளின் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடங்கள் மேம்படுத்துதல், பூங்காக்கள் அமைத்தல், பொதுசுகாதார மையம் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தனியார் பங்களிப்புகள் பெறப்பட்டு மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடக்கு மண்டலம் வார்டு 31க்குட்பட்ட அறிஞர் அண்ணா மாளிகை வளாகம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவில் (எக்கோ பார்க்) நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி எக்கோ பார்கில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இங்குள்ள மரங்களின் சிறிய கிளைகளைக்கூட வெட்டுவதில்லை. ஏனெனில் இங்கு சில ஆண்டுகளாக கிளிகள், காகம், சிட்டுக்குருவி, மைனா உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் இரவு நேரங்களில் தங்கிச்செல்வதை காண முடிந்தது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகள் மரங்களின் பொந்துகளில் இனப்பெருக்கம் செய்து தங்கள் வாரிசுகளை வளர்த்து வருவது தெரிந்தது. இதேபோல காகம், சிட்டுக்குருவிகள், மைனாக்களும் கூடுகட்டி வாழ்ந்து இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் மரங்களுக்கு இடையே தரைப்பகுதி சமப்படுத்தப்பட்டு இயற்கை புற்கள் வளர்க்கும் வகையில் ராட்சத இயந்திரம் மூலம் செம்மண் கொட்டப்பட்டது. இயற்கை புற்கள் பெங்களூருவிலிருந்து விலைக்கு வாங்கி, வேர்பகுதியோடு கொண்டு வரப்பட்டு பதிக்கப்பட்டது.
தற்போது புற்கள் நன்கு வளர்ந்து பச்சை பசேலெனத் காட்சியளிக்கிறது. நடைபாதைக்கு மட்டும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பறவைகளுக்கு அவர்கள் தரப்பில் எந்த தொந்தரவும் இல்லை. பறவைகளுக்கு தேவையான தண்ணீர் வசதியையும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதனால் பகல் நேரங்களிலும் பறவைகள் இங்கு தங்கியிருப்பதை காணமுடிகிறது. இந்நிலையில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து, எக்கோ பார்க் வளாகத்தை பறவைகளின் சரணாலயமாக மாற்ற முடிவு செய்தனர். அதன்படி பறவைகள் அதிக எண்ணிக்கையில் கூடுகள் கட்டினால் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, செயற்கை கூண்டுகளை தயாரித்து அதற்கு பச்சை வர்ணம் தீட்டி எக்கோ பார்க்கில் உள்ள பல்வேறு மரங்களிலும் பொருத்தியுள்ளனர். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கை கூடுகள் மரங்களின் மேல் பொருத்தப்பட்டுள்ளன.
* இது குறித்து கவுன்சிலர் தல்லாகுளம் முருகன் கூறும்போது, ‘‘தினமும் இங்கு நடைபயிற்சி செய்து வருகிறோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகள், மைனாக்கள் இங்குள்ள மரங்களில் வாழ்வதை பார்க்க முடிகிறது. நிறைய பறவைகள் இருப்பதால் அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுகளை கட்ட மரங்களில் போதிய இடவசதி இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆதலால் செயற்கை கூடுகள் தயாரித்து மரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக பறவைகள் இனப்பெருக்கத்தால் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். பறவைகளுக்கு தற்போது தண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மதுரைக்குள் ஒரு சரணாலயம் என்ற நிலைக்கு ஒரு சில மாதங்களில் எக்கோ பார்க் உருமாறும் என உறுதியாக நம்பலாம்’’ என்றார்.