மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 7.45 மணி, காலை 10.10 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டு செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. காலை 10 மணியளவில் மதுரை செல்லும் விமானத்தில் முன்னாள் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்பட 100க்கும் மேற்பட்ட பயணிகள், குறிப்பிட்ட நேரத்தில் மதுரைக்கு செல்ல முடியாமல் பெரிதும் பரிதவித்தனர்.
இதற்கிடையே, சென்னையில் இருந்து காலை 7.45 மணியளவில் மதுரைக்கு செல்ல வேண்டிய இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திர கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, காலை 10.45 மணியளவில் மீண்டும் மதுரைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்ப்டடன. இதில் தமிழிசை சவுந்தரராஜன், சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இன்று மதியம் 12.45 மணியளவில மதுரைக்கு செல்ல வேண்டிய இன்டிகோ ஏர்லைன்ஸூ விமானம் ரத்து செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதில் செல்ல வேண்டிய பயணிகள், மதியம் 2.15 மணிக்கு மதுரை செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவர் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அனைத்து பயணிகளும் விமானநிலைய மற்றும் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.