டெல்லி :மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஒன்றிய அரசு டெண்டர் கோரியது.தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015, பிப்ரவரியில், பாஜ அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019ம் ஆண்டு ஜனவரியில் எய்ம்ஸ் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை.இது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பி வந்தன.
இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிக்கு ஒன்றிய அரசு டெண்டர் கோரி உள்ளது. கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் செப் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் கட்டுமான பணிகளை 33 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள டெண்டர் அடிப்படையில் ஜூன் மாதம் 2026ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு முழுமையாக பயன்பாட்டிற்கு வர 2028 ஜூன் மாதம் ஆகும் என்றும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் டெண்டருக்கு செப்டம்பருக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.