ராமநாதபுரம்: ராமநாதபுரம், பட்டணம்காத்தான் தனியார் பள்ளி சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ் பேசுகையில், 60 சதவீத புற்றுநோய் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களை தாக்கி வந்த நிலையில், தற்போது இளம் வயதினரையும் பாதிக்கிறது. புற்று நோய் தடுப்பூசியை ஒன்றிய, மாநில அரசுகள் இலவசமாக வழங்குகின்றன. இந்த தடுப்பூசியை 19 முதல் 45 வயதினர் போட்டுக் கொள்ளலாம் என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், மதுரையில் எய்ம்ஸ் கட்டிடப்பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மருத்துவக்கல்லூரி, மாணவ, மாணவிகள் விடுதி, வெளி நோயாளிகள் மற்றும் குறிப்பிட்ட உள் நோயாளிகளுக்கான மருத்துவமனை கட்டிட பணிகள் முடிந்து 2025 டிசம்பரில் செயல்பட தொடங்கும். அப்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மதுரைக்கு மாற்றப்படும். மீதி கட்டிடப் பணி அடுத்த 15 மாதங்களில் முடிக்கப்பட்டு, எய்ம்ஸ் முழுவதுமாக செயல்படும் என்றார்.