மதுரை: தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 2,500 பேர் வரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 30 முதல் 40 நாட்களில் சம்பந்தப்பட்ட நபரை அறிவுரைக் குழுமத்தின் முன் போலீசார் ஆஜர்படுத்துவது வழக்கம். அப்போது மாநில அறிவுரைக் குழுமம் முன்பு, கைதான நபரின் உறவினர்கள் ஆஜராகி, குண்டர் சட்ட கைது தவறுக்கான காரணங்களைத் தெரிவிக்கலாம்.
விசாரணக்குப் பிறகு சம்பந்தப்பட்ட நபரின் குண்டர் தடுப்புக் காவலை ஓராண்டுக்கு நீட்டிக்கலாம் அல்லது விடுவிக்க உத்தரவிடலாம். இதற்கான மாநில அறிவுரைக் குழுமம் சென்னையில் மட்டுமே உள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் ஒரு நாள் முன்பாக அழைத்துச் சென்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பிறகு அறிவுரைக் குழுமம் முன் ஆஜர்படுத்தி திரும்பவும் சம்பந்தப்பட்ட சிறைகளுக்கு அழைத்து வருகின்றனர். இதனால் ஏற்படும் சிரமங்களை குறிப்பிட்டு மதுரையிலும் மாநில அறிவுரைக் குழுமத்தின் கிளையை அமைக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரையில் அறிவுரைக் குழுமத்தின் கிளையை அமைக்க 2023, டிசம்பரில் உத்தரவிட்டது. இதையடுத்து மதுரையில் அறிவுரை குழுமம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டது. இந்நிலையில், மதுரையில் அறிவுரைக் குழுமம் அமைப்பது தொடர்பான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.இந்தக் குழுமத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஆனந்தி ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் அறிவுரை குழுமம் வரும் ஆக. 1 முதல் செயல்படத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அமையும் அறிவுரை குழுமம் தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இதனால் ஐகோர்ட் கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைவர்.