சென்னை: மதுரையில் நேற்று நடந்தது அரசியல் மாநாடுதான் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.பி., உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அத்தகைய முருகன் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே பெரியார், அண்ணா குறித்த விமர்சன வீடியோ வெளியீடு செய்யப்பட்டது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்றைய தினம் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மேடை போட்டு பா.ஜ.க.வினர் மக்களை பிளவுபடுத்துகின்றனர். அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பல விமர்சனங்களை வைத்தவர் அண்ணாமலை. அண்ணாமலை இருக்கும் மேடையில் அதிமுகவினர் அமர்கிறார்கள். முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சன வீடியோ வெளியீடு செய்யப்பட்டது. அதிமுகவினர் அடிமை சாசனம் எழுதி கொடுத்ததற்கு இதுவே உதாரணம் என சேகர்பாபு கருத்து
தமிழ்நாட்டில் 71,000 கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான். கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகக் கூடாது என்பதற்காக அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அறநிலையத்துறை எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து புத்தகம் வெளியிட உள்ளோம். ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?. சென்னையில் ஏதாவது ஒருதொகுதியில் பவன் கல்யாண் போட்டியிட்டு வெல்லட்டும்; அதன்பின் பேசட்டும். பெரியார், அண்ணா மட்டுமின்றி, ஜெயலலிதா, MGRயும்தான் அண்ணாமலை வசைபாடியுள்ளார். அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அதிமுகவினர் அமர்ந்தது, அவர்களின் அடிமைத்தனத்தை காட்டுகிறது. யார் பலம் வாய்ந்தவர்கள்? என நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுகிறது.