மதுரை:மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சிப் பேரணி, மாநாடு மதுரை, வண்டியூர் டோல்கேட் பகுதியில் மதுரை முஹம்மது கவுஸ் திடலில் நேற்று மாலை நடந்தது. கட்சித்தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேரணியை தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை:
முஸ்லிம்களுக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். வக்பு திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறவேண்டும். தனியார் துறைகளிலும் சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டும். ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு முறை கைவிடப்பட வேண்டும். பாலஸ்தீனத்தில் நடைபெறும் இன பேரழிவு தடுக்கப்பட வேண்டும். இஸ்ரேல் ஆதரவு போக்கை இந்தியா கைவிட வேண்டும்.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாஜவின் கொள்கை பரப்புச் செயலாளர் போல, மதச்சார்பின்மை போன்ற சொல்லை நீக்க வேண்டும் என்று பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. தேசிய கல்விக் கொள்கை பெயரில் பாசிச கல்விக் கொள்கையை பலவந்தமாக புகுத்த முயலும் ஒன்றிய பாஜ அரசை உறுதியோடு எதிர்த்து நிற்கும் திராவிட மாடல் திமுக அரசுக்கு இம்மாநாடு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவிக்கிறது. தவறான தகவல்கள் கொண்ட தமிழகத்தில் முகமதியர் ஆட்சி தலைப்பிலான பாடம் நீக்கப்பட வேண்டும்.
புழல் சிறையிலுள்ள நீண்டகால விசாரணை சிறைவாசிகளுக்கும் பிணை வழங்கப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை மாற்ற முயல்வது சட்டவிரோதமான செயல். சிக்கந்தர் தர்காவை காப்பாற்றவும், அங்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும் மலைப்பாதையை செப்பனிட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.