திருமங்கலம்: மதுரை திருமங்கலம் அருகே, சிக்கன் சாப்பிட்ட தந்தை, மகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் உள்ள லாலாபேட்டையைச் சேர்ந்தவர் கவுதம் ஆனந்த் (31). இவர், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பெரியபொக்கம்பட்டியைச் சேர்ந்த பவித்ரா என்பவரை திருமணம் செய்தார். அதன்பின் மனைவியின் ஊரிலேயே வசித்து வந்தார். இவர்களது குழந்தை மிது (4). கவுதம் ஆனந்த் கரூரில் கோழிப் பண்ணையில் வேலை பார்த்த அனுபவம் மூலம், மனைவியின் கிராமத்தில் கோழிப் பண்ணை அமைத்து, அருகில் வீடு கட்டி வசித்து வந்தார்.
கணவரும், மனைவியும் பண்ணையை பராமரித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு கவுதம் ஆனந்த், அவரது மகள் மிது, பவித்ரா மூவரும் கோழிக் கறி சாப்பிட்டு தூங்கியுள்ளனர். நேற்று காலை குழந்தை மிது வயிற்று வலி என கூறி அழுவதற்கு துவங்கவே கவுதம் ஆனந்த், அவரது மனைவி இருவரும் குழந்தையை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அப்போது கவுதம் ஆனந்திற்கும் வயிற்று வலி ஏற்படவே தந்தையும், மகளும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை 6.30 மணியளவில் குழந்தை மீது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காலை 9.30 மணியளவில் கவுதம் ஆனந்துமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பவித்ரா கொடுத்த புகாரில், சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். தந்தையும், மகளும் கோழிக் கறி சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் உயிரிழந்தனரா அல்லது வேறு காரணமா என்பது பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்பே தெரிய வரும் என தெரிவித்தனர். இச்சம்பவம் பெரியபொக்கம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.