*மொத்த உணவு பயிர் சாகுபடியில் 46 சதவீதம் வளர்ச்சி
மதுரை : மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட கோடை நெல் சாகுபடி பரப்பு அதிகரித்திருக்கிறது.மதுரை மாவட்டத்தில் அதிகளவில் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி நடக்கும். குறுவை சாகுபடி என்பது ஏப்ரல், மே, ஜூன், வரை நடக்கும். இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் கடந்த ஆண்டை விட இரு மடங்கு நெல் சாகுபடி அதிகரித்திருக்கிறது.
கடந்தாண்டில் கோடை நெல் சாகுபடி 254 எக்டேரில் விவசாயம் நடந்தது. இந்த ஆண்டு 528 எக்டேரில் நெல் விவசாயம் நடக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கினால் சம்பா சீசன் தொடங்கிவிடும். மதுரை மாவட்டத்தில் கோடைகால நெல் சாகுபடி நுாறு சதவீதம் அதிகரித்திருக்கிறது. கோடையில் விவசாயிகள் சிலர் நிலத்தைத் தரிசாக விடுவர். இன்னும் சிலர் தரிசாக இருக்கும் நிலத்தில் மானாவாரிப் பயிர்கள் இடுவர். அதிலும் கோடை விவசாயத்தில் எள், பயறு வகைகள், கேழ்வரகு, குதிரைவாலி போன்றவைகளை பயிரிடுவார்கள்.
மதுரை மாவட்டத்தில் பொதுவாக கோடையில் நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், கோடைகாலப் பயிர் வகைகள் சாகுபடியில் போதிய அளவு ஆர்வம் காட்டுவதில்லை. சம்பா பருவ நெல் அறுவடைக்குப் பின்னர் உளுந்து, பயறு, பருத்தி ஆகியவற்றை விதைக்கின்றனர். வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன் கூறும்போது, ‘‘கடந்தாண்டு கோடை சாகுபடிக்கான நெல் நடவில் 254 எக்டேர் உற்பத்தியானது. இந்தாண்டு செல்லம்பட்டி, வாடிப்பட்டி, மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லுாரில் சாகுபடி பரப்பு 528 எக்டேராக அதிகரித்து 107 சதவீதம் கூடுதலாகி உள்ளது.
கடந்தாண்டு பெய்த மழையால் கண்மாய், கிணற்று பாசனத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு 444 எக்டேராக இருந்த சிறுதானியம் தற்போது 640 எக்டேராக அதிகரித்துள்ளது. பயறு வகைகளும் இருமடங்கு பரப்பு கூடியுள்ளது. நிலக்கடலை, எள், பருத்திக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்தாண்டு மொத்த உணவு பயிர் சாகுபடி 451 எக்டேராக இருந்தது. தற்போது 658 எக்டேராக அதிகரித்து 46 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் தற்போது நிலவும் தட்பவெப்பநிலையின் காரணமாக நெற் பயிரில் இலை பேன், குருத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
வறண்ட வெப்பநிலை காலங்களில் நெற்பயிரில் இலை பேன்கள் அதிகளவில் பெருகி இலையில் உள்ள சாற்றினை உறிஞ்சி, பச்சையம் சுரண்டப்படுவதால் இலையின் நுனி சுருண்டு காய்ந்து காணப்படும். அதேபோல, குருத்துப் பூச்சியின் புழுக்கள், இளம் பயிரின் தண்டில் துளையிட்டு உண்பதால் நடுக்குருத்து காய்ந்து, கதிர் பிடிக்கும் தருணத்தில், மணிகள் பால் பிடிக்காமல் சாவியாகி மகசூல் இழப்பு ஏற்படும். இலை பேன் மற்றும் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த வேளாண் துறையினரின் ஆலோசனையின்படி உரிய பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்கலாம்’’ என்றார்.
எள் கூடுதலாக பயிரிட திட்டம்
மதுரை மாவட்டத்தில் நெல், பயறு வகைகள் சாகுபடியுடன் கடந்த 2, 3 ஆண்டுகளாக பரவலாக எள் பயிரிடுவதிலும் விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து எள் சாகுபடியாளர் விவசாயி முருகையன் கூறுகையில், ‘‘எள் 90 நாள் பயிர். ஒரு ஏக்கரில் எள் சாகுபடி செய்கிறேன். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ எள் விதை போதுமானது. ஏக்கருக்கு 100 கிலோ மகசூல் கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் 100 கிலோ ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விலை கொள்முதல் செய்யப்படுகிறது.
பயிர் தொடக்க காலத்தில் தரப்படும் தண்ணீர் போதுமானது. கோடை வெயிலில் இது நல்ல மகசூலை தரும். இங்கு அறுவடை செய்யும் எள் மதுரையை சுற்றி உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எள் போன்ற கோடைகாலப்பயிர்களை அடுத்தடுத்த ஆண்டிலிருந்து கூடுதலாக பயிரிட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.