மதுரை: மதுரை மாவட்டத்தில் அலகுவிட்டு அலகு மாறுதலுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு ஜூலை 20ம் தேதி கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் என்ற வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி கொண்டிருக்கின்றன.
இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அலகு விட்டு, அலகு திட்டத்தின் கீழ் வேறு துறை பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல இயலாத நிலைதான் தற்போது வரை இருந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆசிரியர்கள் அலகுவிட்டு, அலகு துறை மாறி செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கள்ளர் சீரமைப்பு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்கள் வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் பல ஆண்டுகளாக மனஉளைச்சலில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், அலகுவிட்டு அலகு மாறுதலுக்கு அனுமதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து காத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு, அலகுவிட்டு அலகு ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்ல அனுமதி அளித்துள்ளது. இதனால், பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச்சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என அனுமதியளித்துள்ளது. ஆனால், பள்ளிக்கல்வியிலிருந்து தொடக்கக்கல்வி துறை, மாநகராட்சி, கள்ளர் சீரமைப்பு துறை, ஆதிதிராவிட நலத்துறை மற்றும் இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு பணியிட மாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி துறை இயக்குனரிடம் தடையின்மை சான்று பெறவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல்படி, அலகுவிட்டு அலகு, துறை மாறுதலில் செல்வதற்கு தடையின்மை சான்று கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், தங்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
அலகு மாறுதல் கோரும் விருப்ப கடிதம். தற்போது வகிக்கும் பதவியில் வழங்கப்பட்ட பணி நியமன ஆணை மற்றும் பதவி உயர்வு பெற்றிருந்தால் அதற்கான ஆணையின் நகல். தற்போது வகிக்கும் பதவியில் உரிய அலுவலரால் வழங்கப்பட்ட பணிவரன் முறை ஆணை நகல் அல்லது பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்க நகல், தற்போது வகிக்கும் பதவியில் (இளநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்) தகுதிகாண் பருவம் முடித்த ஆணை நகல் (அல்லது) பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்க நகல். இதுதவிர, விண்ண்ப்பிக்கும் ஆசிரியர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையோ, குற்றவியல் நடவடிக்கையோ, தணிக்கை தடையோ மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை எதுவும் இல்லை என்றும் தலைமையாசிரியரால் சான்று வழங்கப்பட்டு, அதில் முதன்மை கல்வி அலுவலரின் மேலொப்பம் இருக்க வேண்டும். மேலும், அலகு விட்டு அலகு, துறை மாறுதலில் செல்லும் ஆசிரியர். மாறுதல் பெற்று செல்லும் துறையில், இவர் பணிமூப்பில் மிகவும் இளையவராக கருதப்படுவார் என்பதற்கான அந்த ஆசிரியரின் உறுதிமொழி கடிதமும் இணைக்க வேண்டும்.
கலந்தாய்வு தேதி அறிவிப்பு
மதுரை மாவட்டத்தை பொருத்தவரை, அலகு விட்டு அலகு, துறை மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியல் ஜூலை 17ம் தேதி வெளியிடப்படும். இந்த பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் எதுவும் இருப்பின், ஜூலை 18ம் தேதி பதிவேற்றம் செய்ய வேண்டும். இதையடுத்து இறுதி முன்னுரிமை பட்டியல் ஜூலை 19ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 20ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த எமிஸ் இணையதளத்தில், ஆன்லைன் மூலமாக நடக்கவுள்ள இக்கலந்தாய்வில், துறை மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய வழிகாட்டுதல்களை தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி
அரசுப்பள்ளி ஆசிரியர் வாசிமலை கூறுகையில், `அலகு விட்டு அலகு மாறுதலுக்கு இதுவரை வரைமுறைகள் இல்லாமல் இருந்தது. கடந்த ஆட்சி காலத்தில் பலர் தங்களது அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலத்தை பயன்படுத்தி அலகுவிட்டு அலகு மாறுதலில் சென்றனர். தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், பள்ளிக்கல்வி துறையில் எடுக்கப்பட்டு வரும், பல்வேறு நடவடிக்கைகளில் இந்த அலகுவிட்டு அலகு மாறுதலுக்கான வரைமுறைகளை அறிவித்ததும் ஒன்றாகும். மேலும், கலந்தாய்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டிருப்பது சிறப்பான நடைமுறையாகும். இது அலகுவிட்டு அலகு மாறுதலுக்கு காத்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தியாகும் என்றால் அது மிகையாகாது’ என்றார்.
கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு வரப்பிரசாதம்
கள்ளர் பள்ளி ஆசிரியை சுஜாதா கூறுகையில், `இந்த அலகுவிட்டு அலகு மாறும் பள்ளிக்கல்வி துறையின் அறிவிப்பு அரசு ஆசிரியர்கள் அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் தங்கள் குடும்பங்கள் பெற்றோர், குழந்தைகளை எங்கோ விட்டுவிட்டு வேறு அலகு பள்ளிகளுக்கு மாறி. செல்ல பல ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்’’ என்றார்.