மதுரை, நவ.15: மதுரையில் மதுபோதையில் சாலையில் சென்றவர்கள் மீது பட்டாசுகள் வீசிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியில் நேற்று முன்தினம் மாலை வேலுச்சாமி (61) என்பவர், அவ்வழியாக கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மது போதையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்கள் சாலையில் செல்லக்கூடிய பொதுமக்கள் மீது பட்டாசுகளை பற்ற வைத்து வீசி அச்சுறுத்தியுள்ளனர். இதை கண்ட வேலுச்சாமி, அந்த 3 பேரையும் அழைத்து இதுபோன்று செய்யக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வேலுச்சாமி அளித்த புகாரில் கீரைத்துறை போலீசார் சிந்தாமணியை சேர்ந்த வேல்முருகன், பாலு, கவட்டை என்ற முத்துச்சாமி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.