மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி 23-ம் தேதி தொடங்குவதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை தொடங்க இருந்த அரசு பொருட்காட்சி, கனமழை காரணமாக நாளை மறுதினம் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக அரங்குகள் இடம்பெற உள்ளன.
குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள், கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. பொருட்காட்சி 23-ம் தேதி தொடங்கி 45 நாட்கள் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 15, சிறுவர் ரூ.10, மாணவர்களுக்கு ரூ. 5. என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்காட்சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அரங்கிலும் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பறைசாற்றும் வகையில் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பிலும், திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பாக குறளோவிய கண்காட்சி அரங்கு உள்ளிட்ட சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டவுள்ளன.
அதேபோல, சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்துடன் பங்கேற்று மகிழ பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்பொருள் விற்பனை அங்காடி போன்ற 15 தனியார் அரங்குகளும், சிற்றுண்டி விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் மாலையில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.