மதுரை: மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் மதுரை மாநாட்டிற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஓ.பன்னீர் செல்வம் அணியினர் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்திய நிலையில் அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி தங்கள் தரப்பின் பலத்தை காட்ட மதுரையில் நாளை மறுநாள் மாநாடு நடத்துகிறார்.
மாநாட்டிற்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு அமைப்பினர் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். பழனிச்சாமி மதுரைக்கு வரக்கூடாது என போஸ்டர்கள் ஒட்டியுள்ள தென்னாடு மக்கள் மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பழனிசாமி வந்தால் அவருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநாட்டிற்கு வருவோரால் பெருமளவு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதிக்கக்கூடாது என்றும் மதுரை விமான நிலையம் அருகே அதிமுக மாநாடு நடத்த போதிய அனுமதி பெறவில்லை எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காரைக்குடியை சேர்ந்த சேது முத்துராமலிங்கம் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளதால் மாநாட்டிற்கு தடை விதிக்குமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கூறப்பட்டுள்ளது.
அதிமுக மாநாட்டிற்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் சுந்தர், பரத சக்ரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்தது. 4 மாதத்துக்கு முன்பு மாநாட்டுக்கு அறிவிப்பு செய்த நிலையில் கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு தர முடியும் என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. இந்நிலையில் நாளை மறுநாள் மதுரை ஆலங்குளத்தில் அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. மதுரை மாநாட்டில் வெடிபொருட்களோ, பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என அதிமுக தரப்பு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.