புதுடெல்லி: தலைநகர் டெல்லியை மேம்படுத்தும் விதமாக பாஜஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக குடிசை பகுதி மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கையகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய மதராசி முகாம் பகுதியில் இருந்த அனைத்து வீடுகளும் கடந்த 1ம் தேதி புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது. இதையடுத்து அதன் அடுத்த கட்டமாக கல்காஜியின் குடிசைப்பகுதியான பூமிஹின் முகாமில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுமார் 1200 வீடுகள் நேற்று காலை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதில் இப்பபகுதியில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் ஜூன் 10ம் தேதிக்குள்(நேற்று) காலி செய்ய வேண்டும் என்று முன்னதாக டெல்லி மேம்பாட்டு ஆணையம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த முகாமில் 2023ம் ஆண்டில் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மூன்று முறை இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தால், நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.
குறிப்பாக இங்கு வசித்து வந்த மக்களுக்கு டெல்லி மேம்பாட்டு ஆணையம் தரவின்படி, கல்காஜி பூமிஹின் முகாமில் இருந்து 1,862 வீடுகள் டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்தின் கொள்கையின் கீழ் இடமாற்றத்திற்கு தகுதியுடையவை எனக் கண்டறியப்பட்டது. இது ஜனவரி 1, 2015க்கு முன் வசிப்பதற்கான சான்றிதழை கட்டாயமாக்கப்படுகிறது. இந்த குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் மற்றும் தங்குமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த இடத்தில் முதலில் பதிவு செய்யப்பட்ட 1,618 கட்டமைப்புகளில், 935 ஏற்கனவே முந்தைய இயக்கங்களில் இடிக்கப்பட்டுள்ளன .மீதமுள்ள 683 கட்டமைப்புகள், ஏழு வழிபாட்டு தலங்கள் போன்றவை பல காரணங்களால் இடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.