சென்னை: கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹேமந்த் சந்தன்கவுடரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து சமீபத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஹேமந்த் சந்தன்கவுடர் நேற்று பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது.
பதவியேற்பு நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். புதிய நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடன் 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தார். 1994ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கிய ஹேமந்த் சந்தன்கவுடர் 2019ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் சிறந்த கோல்ப் வீரர் ஆவார்.