Thursday, February 22, 2024
Home » போலீஸ் தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐ சீனியாரிட்டி பட்டியல் இரு பயிற்சி தேர்வு அடிப்படையில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐ சீனியாரிட்டி பட்டியல் இரு பயிற்சி தேர்வு அடிப்படையில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

by Ranjith

சென்னை: காவல்துறையில் பணிவிதிகள், தொழில்நுட்பம் ஆகிய இரு பயிற்சிகளுக்கு பிறகு நடத்தப்பட்ட இரு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே உதவி ஆய்வாளர் சீனியாரிட்டி பட்டியலை தயார் செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் 154 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு 2001ல் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சட்டம், பணி விதிகள், கணிப்பொறி தொடர்பான பயிற்சிகள் முதல் மூன்று மாதங்களுக்கும், தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கும் வழங்கப்பட்டன.

இரண்டு பயிற்சிகளுக்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், சட்டம், பணி விதிகள் குறித்த பயிற்சிக்கு பின் நடத்தப்பட்ட தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டது. 2007ல் வெளியிடப்பட்ட இந்த பணி மூப்பு பட்டியலில், தொழில்நுட்ப பயிற்சிக்குப் பின் நடந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தங்களது பெயர், கடைசியில் இடம் பெறப்பட்டிருப்பதாக கூறி உதவி ஆய்வாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தொழில்நுட்ப பயிற்சிக்குப் பின் நடத்தப்பட்ட தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மனுதாரர்களுக்கு உரிய பணி மூப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து சட்டம், பணி விதிகள் தொடர்பான பயிற்சிக்கு பின் நடத்திய தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற உதவி ஆய்வாளர்கள் மேல்முறையீடு செய்திருந்தார்கள். 2018ல் தாக்கலான இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு, இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிமூப்பு பட்டியலை தயாரித்து, 2 மாதங்களுக்குள் வெளியிட உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

three × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi