சென்னை: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வரும் சமீம் அகமதுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஆர்.மகாதேவன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் பதவி வகித்து வருகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் ஒதுக்கீடு உள்ள நிலையில் தற்போது 62 நீதிபதிகள் உள்ளனர். இன்னும் 13 நீதிபதிகள் பதவி இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீம் அகமதுவை நியமனம் செய்யுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி சமீம் அகமது நியமிக்கப்பட்டால் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயரும்.