சென்னை: சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், 188வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பெரியார் நகர், ராம் நகர், சதாசிவம் நகர், குபேரன் நகர், லட்சுமி நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மேற்கண்ட பகுதிகளில் அனைத்து தெருக்களிலும் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து, குடிநீர் வாரியம் சார்பில், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக லாரிகளில் மூலம் இங்குள்ள சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் நிரப்பாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து லட்சுமி நகர் பகுதி மக்கள் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் எங்கள் பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் இல்லையென்றால் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டிகளில் இருந்து குடிநீர் பிடித்து பயன்படுத்துவோம்.
ஆனால், தற்போது மடிப்பாக்கம் பகுதி முழுவதும் கடந்த ஒருவார காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கடும் அவதிக்குள்ளாகிறோம். வசதி உள்ளவர்கள் கடையில் பணம் கொடுத்து கேன் குடிநீர் வாங்கி குடிப்பதற்கு, சமைப்பதற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், ஏழைய எளிய மக்கள் இந்த சின்டெக்ஸ் தொட்டிகளில் வரும் குடிநீரையே நம்பி உள்ளதால் சிரமப்படுகிறோம். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.