ஆலந்தூர்: மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவரது மகள் ஹரிணி (14), வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை அந்த பகுதியில் மழை பெய்ததால், 4வது மாடியில் உள்ள கொடி கம்பியில் காய போட்டு இருந்த துணிகளை எடுக்க ஹரிணி சென்றுள்ளார்.
அப்போது, உயரத்தில் இருந்த கம்பியில் இருந்து துணியை எடுக்க முயன்றபோது, கால் வழுக்கியதால், மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு இடுப்பு, கை, கால், எலும்பு, முறிவு ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனே ஹரிணியை மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.