புதுடெல்லி: “பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் இரண்டாம்தர நடிகை” என்று ராஜஸ்தான் காங்கிரஸ் பேரவை உறுப்பினர் திகாராம் ஜூல்லி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், 2025 சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த 8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த சூழலில் ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது விவாதத்தில் பேசிய காங்கிரஸ் பேரவை உறுப்பினர் திகாராம் ஜூல்லி, “ 2025 சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் என்ற பெயரில் ரூ.100 கோடிக்கும் அதிகமான மக்கள் பணம் செலவழிக்கப்பட்டது.
இதற்காக வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் ராஜஸ்தானின் விளம்பரம் அல்ல. அது 2025 சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் அமைப்பின் விளம்பரம். இங்கு நடந்த இந்த விழாவால் ராஜஸ்தானுக்கு என்ன லாபம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திரங்கள் இங்குள்ள எந்த சுற்றுலா தலங்களையும் பார்வையிடவில்லை. மேலும் ஷாருக்கானை தவிர வேறெந்த பெரிய நட்சத்திரங்களும் வரவில்லை. அவரைதவிர மற்ற அனைவரும் இரண்டாம்தர நட்சத்திரங்கள்” என்றார்.
இதற்கு பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, “இப்போது மாதுரி தீட்சித் இரண்டாம்தர நடிகைதான். அவரது உச்சம் போய் விட்டது” என மீண்டும் தெரிவித்தார். இதற்கு பாஜவினரும், பாலிவுட் திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேரவைக்கு வௌியே செய்தியாளர்களிடம் பேசிய திகாராம் ஜூல்லி, “இந்த விருது விழாவில் ஷாருக்கான் தவிர பெரிய நடிகர் யாரும் கலந்து கொள்ளவில்லை. மாதுரி தீட்சித் நல்ல நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் புகழின் உச்சத்தில் இருந்த காலம் போய்விட்டது” என விளக்கம் அளித்தார்.


