Sunday, July 21, 2024
Home » மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி; காட்டுநாயக்கன் சாதி சான்று வழங்க கோரி மாணவர்கள் மனு

மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி; காட்டுநாயக்கன் சாதி சான்று வழங்க கோரி மாணவர்கள் மனு

by Mahaprabhu

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் காட்டுநாயக்கன் சாதிச்சான்று வழங்கக்கோரி மாணவர்கள் மனு அளித்தனர். மதுராந்தகம் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை (65). இவர் தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் துணை தலைவராக உள்ளார். இவர், இந்த சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு காட்டுநாயக்கன் சாதிச்சான்று வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட முயற்சிகளையும், போராட்டங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் அதிகாரிகளை சந்தித்து தங்கள் சமூக மக்களுக்கு காட்டுநாயக்கன் சாதிச்சான்று வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார். அப்போது, மதுராந்தகம், சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த சமூகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு காட்டுநாயக்கன் சாதிச்சான்று வழங்கக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அவர்களின் மனுக்களை பெற்றுக்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தனர்.

இதுகுறித்து சமூக மக்கள் கூறுகையில், ‘எங்களுக்கு உரிய சாதி சான்று கிடைக்காத காரணத்தினால் நாங்கள் அரசின் பல்வேறு நல திட்டங்களை பெறமுடியவில்லை. எங்கள் பிள்ளைகள் பள்ளி கல்லூரிகளில் எங்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டில் படிக்க முடியவில்லை. அரசு வேலை வாய்ப்புகளிலும் எங்களுக்கான இடங்களை பெற முடியவில்லை. எனவே, அரசு அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு எங்களுக்கு காட்டு நாயக்கன் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், என்றனர்.

You may also like

Leave a Comment

5 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi