சென்னை: மது அருந்துவதற்கு வாங்கி வைத்த ஆம்லெட்டை சாப்பிட்டதால் மைத்துனரை அடித்து ெகான்ற மாமனை போலீசார் கைது செய்தனர். கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் உய்யாலி குப்பம் இருளர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (30). இவரது மாமா, புதுப்பட்டினம் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகன் (32). கூலி வேலை செய்து வந்த இருவரும் அவ்வப்போது, ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, புதுப்பட்டினம் இசிஆர் சாலை அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதற்காக, சைடிஷ்களை இருவரும் சாப்பிட்டுள்ளனர். அப்போது, கடைசியாக இருந்த ஒரு ஆம்லெட்டை யார் சாப்பிடுவது என்பதில் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அதிக போதையில் இருந்த செல்லப்பன் அந்த ஆம்லெட்டை சாப்பிட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த முருகன் தகாத வார்த்தைகளால் செல்லப்பனை திட்டியுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த முருகன், அருகே கிடந்த ஒரு பெரிய கட்டையை எடுத்து, செல்லப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து, முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வழியே வந்தவர்கள் இதை பார்த்து கல்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, செல்லப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் செல்லப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்தனர். விசாரணையில், மது அருந்த வாங்கி வந்த ஆம்லெட்டை எடுத்து சாப்பிட்டதால் செல்லப்பனை அடித்து கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.