திருவொற்றியூர்: மாதவரத்தில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் 608 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை அமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில், அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. போக்குவரத்துத்துறை நிர்வாக இயக்குனர் குணசேகரன் தலைமை வகித்தார்.
மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ஓய்வு அறையை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்து கழக பொது மேலாளர் சுந்தரபாண்டியன், மண்டலக்குழு தலைவர் நந்தகோபால், கவுன்சிலர் கார்த்திகேயன், திமுக வார்டு செயலாளர் பிரேம்குமார் மற்றும் தொமுச நிர்வாகிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.