சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் மெட்ரோ ரயில் நிலையம் தான் இருப்பதிலேயே தரை மட்டத்தில் இருந்து மிகவும் ஆழத்தில் அமையும் ரயில் நிலையமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.
இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இதில் 3 நிலையங்கள் மிக தாழ்வாக அமைக்கப்பட உள்ளது. மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை மற்றும் பாரதிதாசன் சாலையில் அமைய உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் மிக குறுகிய இடத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக மெட்ரோ ரெயில் சுரங்கம் பல அடுக்குகளாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையங்கள் குறுகியதாகவும், ஆழத்திலும் அமைய உள்ளது.
2026ம் ஆண்டில் இந்த 2ம் கட்ட பணிகள் முடிந்து பொதுமக்கள் விரைவு சேவைக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படும், என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் மெட்ரோ ரயில் நிலையம் தான் இருப்பதிலேயே தரை மட்டத்தில் இருந்து மிகவும் ஆழத்தில் அமையும் ரயில் நிலையமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாதவரம் பஸ் டிப்போ அருகே இந்த மெட்ரோ நிலையமும் அமைய உள்ளது. மேலும் ஆலந்தூரில் உள்ளது போலவே மெட்ரோ டிக்கெட் கவுண்டர் மேல் தளத்தில் அமைய உள்ளது. இதனால் பயணிகள் கீழே சென்று டிக்கெட் எடுக்க தேவையில்லை. நந்தனம் மெட்ரோ நிலையம் தான் இருப்பதிலேயே 30 மீட்டர் ஆழத்தில் அமைய உள்ளது. அதாவது, தரையில் இருந்து 6.9 மீட்டருக்கு கீழ் (23 அடி) மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. பூமிக்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இதுதான் இருப்பதிலேயே ஆழமான மெட்ரோ ரயில் நிலையமாக இருக்கும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* சவாலான பணி மயிலாப்பூர் பகுதியில் அமைய உள்ள மெட்ரோ சுரங்கபாதை பணிகள் கடினமான பாறையில் சவாலான வகையில் அமைய உள்ளது. இந்த சுரங்க பாதைகள் அடுக்கு சுரங்கமாக ஒன்றன் பின் ஒன்றாக கீழே இருந்து கட்டப்பட உள்ளது. 4 ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெறும்.