ஷில்லாங்: மேகாலயாவில் சுற்றுலா பயணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) என்பவருக்கு சோனம் என்பவருடன் கடந்த மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது. புதுமண தம்பதியினர் மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். ஷில்லாங்கில் இருந்து சிரபுஞ்சிக்கு ஸ்கூட்டரில் இருவரும் சென்றுள்ளனர். அவர்கள் மே 24ம் தேதி நோங்கிரியாட் என்ற இடத்தில் தங்கியிருந்த விடுதியை காலி செய்து விட்டு திரும்பியுள்ளனர்.
அதன் பிறகு இருவரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் தேடிய போது 20 கிமீ தொலைவில் அழுகிய நிலையில் சடலம் கிடந்தது. கையில் ராஜா என டாட்டூ குத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் அது ராஜா ரகுவன்ஷி என உறுதியானது. ஆனால், அவருடன் சென்ற சோனமை காணவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கொலை செய்யப்பட்ட ரகுவன்ஷியின் குடும்பத்தினர் இந்த கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோருவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சங்மா, ‘‘இது துரதிர்ஷ்டவசமானது, மேகாலயாவில் இதற்கு முன்பு யாரும் கண்டிராத ஒன்றாகும். கொலை செய்யப்பட்டவரின் மனைவியை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறது. இதில் சம்மந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ரகுவன்ஷியின் குடும்பத்தினர் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கின்றனர். அது குறித்து தகுந்த முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.