போபால்: மபி அரசு பள்ளிகளில் சீரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மெகா ஊழல் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 2 பள்ளிகளில் ஆன செலவு இணையதளத்தில் வைரலாகி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டம் சாகண்டி கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளிச் சுவற்றை சீரமைத்து, நான்கு லிட்டர் பெயிண்ட் அடிக்க 168 தொழிலாளர்கள் மற்றும் 65 கொத்தனார்கள் பணியமர்த்தப்பட்டனர். அதற்காக ரூ.1.07 லட்சம் பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் நிபானியா கிராமத்தில் உள்ள மற்றொரு பள்ளியில் 10 ஜன்னல்கள், 4 கதவுகள் அமைத்து 20 லிட்டர் பெயிண்ட் அடிக்க ரூ.2.3 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வேலைக்கு 275 தொழிலாளர்களும், 150 கொத்தனார்களும் பணியமர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பள்ளிகளிலும் நடந்த வேலைக்கான பில் தொகை நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பணியை அங்குள்ள சுதாகர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் மேற்கொண்டு கடந்த மே 5ஆம் தேதி பில் வழங்கி உள்ளது. இதற்கு நிபானியா பள்ளி முதல்வர் ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த பில் இணையதளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மெகா ஊழல் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி பூல் சிங் மார்பாச்சி கூறுகையில்,’இந்த இரண்டு பள்ளிகளில் நடந்த சீரமைப்பு பணி தொடர்பான பில்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவை விசாரிக்கப்பட்டு வருகின்றன. வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’என்றார்.