ராஜ்கர்: மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் சுதாலியா நகரில் ராணி அவந்தி பாய் லோதி சிலையை முன்னாள் ஒன்றிய அமைச்சரும் அம்மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான பிரகலாத் சிங் படேல் திறந்து வைத்து பேசியதாவது:மக்கள் சமூகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் அரசிடம் பிச்சை எடுக்கப் பழகிவிட்டனர். அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் வரும் போதெல்லாம், மேடையில் அவர்களுக்கு மாலை அணிவித்த உடனே கூடை கூடையாக கோரிக்கை மனுக்களை கொடுக்கிறார்கள். எப்போதும் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக கொடுக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நாட்டிற்காக உயிரை தியாகம் செய்தவர்கள், ஏன் அப்படி செய்தார்கள்? அவர்களின் மதிப்புகளை நம் வாழ்வில் புகுத்தினால் நம் வாழ்க்கையும் வெற்றி பெறும். நீங்கள் இதை செய்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண்பட்ட சமூகத்தை உருவாக்க உதவுவீர்கள் என நம்புகிறேன். பிச்சைக்காரர்கள் படையை ஒன்று சேர்ப்பது சமூகத்தை வலுப்படுத்தாது. மாறாக பலவீனப்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.