‘‘தேனிக்காரரின் மா.செ. முழுநிலவுக்கு போனாராமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் தேனிக்காரரின் உரிமை கட்சிக்கு 5 மா.செ. இருக்காங்களாம்.. இதில் மத்திய மா.செ.வாக இருப்பவர் பவர்புல்லான ஆளாம்.. இவர் எப்படி அந்த பக்கம் போனார் என இலைக்கட்சி தலைவர் கூட ஆதங்கப்பட்டாராம்.. மேலும், அவரை இலைக்கட்சிக்கு இழுக்கும் வேலையும் நடந்துச்சாம்.. ஆனால் தேனீக்காரரின் மீது பற்றுக்கொண்டதால், அந்த மா.செ. மறுத்துட்டாராம்.. மாங்கனி மாநகருக்கு தேனிக்காரர் வந்தாரென்றால் குதிரை, தாரை தப்பட்டையுடன் பிரமாண்ட வரவேற்பு கொடுப்பாராம்.. இதனால இலைக்கட்சி தலைவரின் ஆட்கள், பேனரை கிழித்த சம்பவமும் நடந்துச்சாம்.. இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக போகிட்டிருந்த நேரத்துல அந்த மா.செ.மீது தேனிக்காரருக்கு திடீரென கோபம் வந்திருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க..
இலைக்கட்சி தலைவர், தேனிக்காரர் ஊருல பொதுக்கூட்டத்தை நடத்தினாராம்.. அதேபோல இலைக்கட்சி தலைவரின் எடப்பாடி ஊருல, ஒரு கூட்டத்தை கூட்டி நாம யாருன்னு நிருபிச்சி காட்டணுமுன்னு முடிவு செஞ்சாங்களாம்.. இது தொடர்பா 5 மா.செ.க்களும் இணைஞ்சி பேசினாங்களாம்.. இதுல உடன்பாடு ஏற்படலையாம்.. இதனால கூட்டம் ரத்தாகி போச்சாம்.. கரை வேட்டி கட்ட முடியாத நிலையில, ஆதரவின்றி தவிக்கும் நேரத்தில், கூட்டத்தை கூட்ட முடியலையான்னு தேனிக்காரர் அந்த மா.செ.வை பார்த்து கோபத்தோடு கேள்வி கேட்டாராம்.. இவ்வாறு நீறுபூத்த நெருப்பாக உரசல் இருந்துக்கிட்டே இருந்துச்சாம்.. இந்நிலையில் தான் அந்த மா.செ., மஞ்சள் பனியன் போட்டுக்கிட்டு, முழுநிலவு மாநாட்டுக்கு போனாராம்.. இந்த விவகாரம் தேனிக்காரர் காதுக்கு போயிருக்காம்.. அதே நேரத்தில் அந்த மா.செ.வை தங்களது வலைக்குள் கொண்டு வர இலைக்கட்சி தீவிரமாக இருக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைத்தலை பேசின பேச்சக் கேட்டு சொந்தக் கட்சியே கொதிச்சு போயிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களால்தான் நீதி கிடைத்ததுனு மனசாட்சியே இல்லாம சொல்றாரு இலைக்கட்சி தலைவர். இதைக்கேட்டு ரத்தத்தின் ரத்தங்கள் பெரும் ஷாக்குலதான் இருக்காங்களாம். இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில் அந்த காட்சியை கண்டவர்கள் நெஞ்சமெல்லாம் கண்ணீர் வடிந்தது. அண்ணா அண்ணா என்னை விட்டுருங்கண்ணான்னு கதறிய சத்தம் இன்னும் இதயத்தை நொறுக்கிக்கிட்டே இருக்குது. இதற்கு தீர்வு கிடையாதான்னு கதறிய நிலையில், இலைக்கட்சி தலைவர் ஆட்சியில் வழக்கு கூட பதிவு செய்யலை. ஏனென்னால் இதில் தொடர்புடையவர்கள் இலைக்கட்சியை சேர்ந்தவர்கள். இதனால் கொதித்தெழுந்த மகளிர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்திய பிறகு தான் வழக்கே பதிவாச்சு. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தொடர் நெருக்கடி கொடுத்த பிறகு தான் வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் இந்த வழக்கில் தற்போது குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைச்சிருக்கு. ஆனா இந்த நீதிக்கு இலைக்கட்சி சொந்தம் கொண்டாடுவதை நினைக்கும் போது வேதனையாக இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்களே சொல்றாங்க. பொள்ளாச்சி என்றாலோ, தூத்துக்குடி என்றாலோ நினைவுக்கு வருவது அங்கு நடந்த கொடுமையும், இலைக்கட்சியும் தான்.. இத்தனை துன்பங்களுக்கு இடையில் எங்களால்தான் நீதி கிடைத்ததுன்னு சொல்வது, எந்த பொய்யை சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்ற தைரியம் தான். இதையெல்லாம் சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்.. அது எங்களது தலைவருக்கு ரொம்பவே அதிகமா இருக்குதுன்னு இலைக்கட்சி தொண்டர்கள் அடிச்சு சொல்றாங்க..’’ என சிரித்தபடி சொன்னார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சி கோஷ்டி கானம் வேகம் எடுத்திருக்கு போல..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் இலைக்கட்சியில் முன்னாள் மந்திரியான மீசைக்காரர், சிட்டிங் எம்எல்ஏ என இரு தரப்பு கோஷ்டிகள் உள்ளனர். இதனால் மாவட்டத்தில் இக்கட்சியினரின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதாக தொண்டர்களே குற்றம்சாட்டுகின்றனர். சிட்டிங் எம்எல்ஏ மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளதால், கட்சி தொடர்பான முக்கிய தகவல்களை மீசைக்காரருக்கு தெரிவிப்பதில்லை… அவரை அழைக்காமலே நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்… மறுபுறம் தன் தரப்பில் போட்டிக்கூட்டம், நிகழ்ச்சிகள் நடத்துவது என, மீசைக்காரரும் சளைக்காமல் எதிர் அரசியல் செய்து வருகிறார். மாறி, மாறி நடக்கும் கூட்டங்களால், எங்கே போவது என தெரியாமல் தொண்டர்கள் தவிக்கின்றனர். கடந்த தேர்தல் போல இந்த முறை தனக்கு சீட் கிடைக்காமல் போகக்கூடாது, என்பதில் மீசைக்காரர் தனிக்கவனம் எடுத்து காய் நகர்த்தி வருகிறாராம். இவருக்கு இந்த முறையும் சீட் கிடைக்காமல் செய்ய வேண்டுமென்பதில், சிட்டிங் தரப்பும் தீவிரமாக உள்ளதாம். இருவரிடையே நடக்கும் பனிப்போர் எங்கு கொண்டு போய் விடுமோ என தெரியாமல் கட்சியினர் புலம்பி வருகின்றனர்…’’ என்றார் விக்கியனாந்தா.
‘‘ரத்த தான மேட்டர் கேலியாகிப் போச்சாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் சேத்துல தொடங்கி பட்டுல முடியுற ஏரியாவுல 2 நாளைக்கு முன்னாடி சேலத்துக்காரரோட பர்த்டே புரோகிராம் நடந்திருக்குது. இதுக்காக ரத்தத்தின் ரத்தங்கள், ரத்த தான முகாம் நடத்தியிருக்காங்க. இந்த புரோகிராம்ல சென்டரல் டிஸ்ட்ரிக் செக்ரட்ரி கலந்துகிட்டிருக்காங்க. இவங்கதான் புரோகிராம தொடங்கி வெச்சிருக்காங்க. அதோட இல்லாம, சேலத்துக்காரர் பர்த்டேவுக்கு ரத்தம் கொடுக்குற மாதிரி பெட்ல படுத்துக்கிட்டு, கைலயும் அதுக்கான ஊசிகளை குத்திக்கிட்டமாதிரி பாவ்லா காட்டி சேலத்துக்காரர் பர்த்டேவுக்கு அல்வா கொடுத்திருக்காங்க. ரத்தத்துக்கு பதிலாக அந்த செக்ரட்ரி கொடுத்த அல்வா, சமூகவலைதளங்கள்ல வெளிச்சத்துக்கு வந்து இப்ப, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு நிலைமை ஆகிடுச்சு. ரத்தத்தின் ரத்தங்களே அந்த செக்ரட்ரிய வசைபாடி வர்றாங்களாம். கிரிவலம் மாவட்டம் மட்டுமில்லாம ஓவர் ஆள் தமிழ்நாட்டுலயே இந்த டாபிக் டிரெண்டாகிட்டு இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
தனது ஆதரவு மா.செ. முழுநிலவு மாநாட்டுக்கு போய் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ள தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0