* 7,090 புதிய தொழிற்சாலைகள் பதிவு
* 20 நல வாரியங்கள் மூலம் ரூ.1,551 கோடியில் நலத் திட்ட உதவிகள்
* தனியார் துறை மூலம் 2 லட்சம் பேர் பணி நியமனம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் எண்ணற்ற தொழிலாளர் நலத் திட்டங்களால் உழைக்கும் மக்களின் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்வு பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 2021ம் ஆண்டு புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்கள் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவை பின்வருமாறு:
* 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16 லட்சத்து 499 உறுப்பினர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 18 லட்சத்து 46 ஆயிரத்து 945 தொழிலாளர்களுக்கு ரூ.1,551 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
* தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் 26 ஆயிரத்து 649 தொழிலாளர்களுக்கு ரூ.14 கோடியே 99 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது, 45 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு; பல்வேறு தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர்.
* அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,000 என்பது ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 2 கோடியே 40 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாக கட்டடம் கட்டப்பட்டு கடந்தாண்டு ஜூலை 23ம் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
* சமரச பேச்சுவார்த்தையின் மூலம் 41 நிறுவனங்களில் நடைபெற்ற வேலை நிறுத்தங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டு 13,825 தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்ட 2,930 வழக்குகள் உள்ளிட்ட 7,145 தொழில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தங்கள் திரும்ப பெறப்பட்டன.
* 669 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு ரூ.1 கோடியே 71 லட்சம் உடனடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது.
* 889 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுவினரிடமும், பெற்றோர்களிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.
* தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு:
* கடந்த 1948ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 7,090 தொழிற்சாலைகள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* கடந்த 1996ம் ஆண்டு கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் சட்டத்தின்கீழ் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் 5,019 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* 76,341 தொழிற்சாலை பணியாளர்கள் பயனடையும் வகையில் 1,391 பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
* தன்னார்வ பயிலும் வட்டங்களில் ரூ.10.08 கோடி செலவில் 3 ஆண்டுகளில் நடத்திய பயிற்சி வகுப்புகளில் 5,138 நபர்கள் தேர்ச்சி பெற்று அரசு மற்றும் பொதுத்துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 56,564 பொதுப் பயனாளிகளுக்கு ரூ.86.59 கோடியும், 14,420 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.36.92 கோடியும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
* சிறிய மற்றும் பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் நடத்தப்பட்டு கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 379 வேலை நாடுநர்கள் இந்த முகாம்கள் வாயிலாக தனியார் துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
* கல்வித் தொலைக்காட்சி மூலமாக கடந்த பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளில், 1,228 மணி நேரப் பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டு மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
* வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மேற்கொண்ட திட்டங்கள் பின்வருமாறு:
* நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஆதரவுடன் நெய்வேலியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் 1-12-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
* ரூ.9.6 கோடி செலவில் சிவகங்கை, காரைக்குடி, புள்ளம்பாடி (மகளிர்) ஆகிய 3 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான விடுதிக் கட்டிடங்கள் கடந்த 2021 டிச.1ம் தேதி திறந்து வைக்கப்பட்டு உள்ளன.
* 2023 ஆம் ஆண்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 94.58 சதவீதம் மாணவர் சேர்க்கையும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 48.06 சதவீதம் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுள்ளன.
* 2023 ஆம் ஆண்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 81 சதவீதம் மாணவர்களும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 62.38 சதவீதம் மாணவர்களும் வளாக நேர்காணல் மூலம் பணியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.
* தென்காசி, செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு:
* 71,832 காப்பீட்டாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் புதியதாக 19 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் பாதுகாத்து வருவதால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அகில இந்திய அளவில் சிறந்த முன்னேற்றங்களைக் கண்டு சாதனைகள் படைத்து வருவதை ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் உட்பட பல்வேறு அமைப்புகள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ரூ. 2,877 கோடியில் 71 ஐடிஐயில் 4.0 தரத்தில் தொழிற்பிரிவுகள்
* தனியார் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, ரூ.2,877.43 கோடி செலவில் 71 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகள் துவங்கப்பட்டு 5,140 கூடுதல் இருக்கைகள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
* 57 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சீர் செய்ய இயலாத மற்றும் உபயோகமற்ற நிலையில் இருந்த இயந்திரங்கள். கருவிகள் மற்றும் தளவாடங்களை மாற்றி 20 கோடி ரூபாய் செலவில் புதிய மற்றும் நவீன இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
* ரூ.97.55 கோடி செலவில் புதிதாக 11 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கப்பட்டு கூடுதலாக 1,104 மாணவர்கள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 6.80 கோடி ரூபாய் செலவில் தமிழில் பாடப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.