சென்னை: அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன. தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் தியாகராஜன்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு அகவிலைப் படியை 4 சதவீதம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட அகவிலைப் படி உயர்வுடன் தற்போது வழங்கியுள்ளதை இணைத்தால் 42 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும். இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு காரணமாக இருந்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி, ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றிய அரசு ஒவ்வொரு முறையும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் உயர்த்தி வழங்கும் என்ற உறுதியை தமிழக முதல்வர் அளித்துள்ளார். அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், பழைய முறையின் அடிப்படையிலும், கல்வி நலன் சார்ந்தும் பள்ளிக் கல்வி ஆணையர் பணியிடத்தை ரத்து செய்து மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஆணையர் பதவியை ரத்து செய்துள்ளதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம்: தமிழக அரசின் கடுமையான நிதி நெருக்கடி சூழ்நிலையிலும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள முதலமைச்சருக்கு சாலைப்பணியாளர் 10 ஆயிரம் குடும்பங்கள் சார்பிலும், 18 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் குடும்பங்கள் சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு அகவிலைப் படியை 4 சதவீதம் உயர்த்தியதற்கு நன்றி. 16 லட்சம் பேர் பயன்படக் கூடிய வகையில் 1.4.2023 முதல் அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்கியிருக்கும் முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.