பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து HSR லே-அவுட்டுக்கு சென்று கொண்டிருந்த வால்வோ பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மற்றும் கார்கள் மீது சரமாரியாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து எச்எஸ்ஆர் லே அவுட்டுக்கு சொகுசு பஸ் ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. பெங்களூரு ஹெப்பல் மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்றுகொண்டிருந்த பைக்குகள் மற்றும் கார்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
பஸ் ஓட்டுநர், பிரேக் பிடிக்க முயன்றும், முடியாததால் சுமார் 10 விநாடிகளுக்கு பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில் பைக்குகள் மற்றும் கார்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதுடன், 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.