புதுடெல்லி: லூதியானா இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக பஞ்சாப் அரசியலில் பேசப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. கட்சியின் வேட்பாளரும், தற்போதைய ராஜ்யசபா எம்பியுமான சஞ்சீவ் அரோரா, 10,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், கடந்த 2022ல் மாபெரும் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு பஞ்சாப்பில் மேலும் வலுப்பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘லூதியானா மக்கள் ஒரு எம்.எல்.ஏ-வை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை; வருங்கால அமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்’ என்று வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதியின்படி, இடைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற சஞ்சீவ் அரோரா, பஞ்சாப் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்பது உறுதியாகி உள்ளது.
இதன் காரணமாக, அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சஞ்சீவ் அரோரா ராஜினாமா செய்வதால், அப்போது காலியாகும் ராஜ்யசபா இடத்திற்கு யார் நியமிக்கப்படுவார்? என்ற கேள்வி தற்போது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்தான் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தத் தகவலை அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் பஞ்சாபிலிருந்து ராஜ்யசபாவிற்குச் செல்லவில்லை’ என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை கெஜ்ரிவால் மறுக்கும் பட்சத்தில், சட்டப் போராட்டங்களில் சிக்கியுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அல்லது கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.