சென்னை: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எஸ்.பி.ஆதித்தனாரால் நாம் தமிழர் கட்சி கடந்த 1958ம் ஆண்டு தொங்கப்பட்டது.
அவரது மறைவுக்கு பின்னர் திரைப்பட இயக்குநர் சீமான் 2010ம் ஆண்டு முதல் தலைமை ஒருங்கிணைப்பாளராக இந்த கட்சியை நிர்வகித்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிரசாரத்திற்கு தமிழகம் வந்தபோது குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். இதையடுத்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதித்தது. தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் தமிழக அரசுகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆகியோர் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், ஒன்றிய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு மனு கொடுத்து சில நாட்களிலேயே பொதுநல வழக்கு தொடர்வதா என்று மனுதாரரிடம் கேட்டனர். இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை வாபஸ்பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.