சென்னை: வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய ஒடிசா கடலோரப் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 26ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் வெயில் மற்றும் வெப்பநிலை சில இடங்களில் அதிகரித்துள்ள நிலையில் சில இடங்களில் மழையும் பெய்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் அதிகரித்துள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கரூர், தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தொண்டியில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது.
இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழையும் பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்னகல்லாறு 70மிமீ, சோலையார், வால்பாறை, திருநெல்வேலி 50மிமீ, பெய்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலின் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய ஒடிசா கடலோரப் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 26ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.