சென்னை: வங்கக் கடலில் ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 30ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளில் கிழக்கு, மேற்கு மற்றும் வட மேற்கு திசைக் காற்றுகளின் இணைவு காரணமாக கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகனமழையும் பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளது.
இந்நிலையில், சென்னை, நீலகிரி, கடலூர், ஈரோடு, நாகப்பட்டினம், திருநெல்வேலி, சேலம், திருவள்ளூர், கோவை, வேலூர், மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது. அத்துடன், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், திருச்சி, நீலகிரி(ஊட்டி) மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரிக்கும் கீழே வெப்பநிலை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் நேற்று, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமுதல் அதிகனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
இதற்கிடையே, ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. இது வடக்கு நோக்கிநகர்ந்து மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தில் இன்று, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மு தல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
இதே நிலை 30ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் நேற்று பெரும்பாலான இடங்களில் மாலையில் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இன்றும் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.