கூடுவாஞ்சேரி: கீரப்பாக்கம் ஊராட்சியில் குறைந்த மின்னழுத்த பிரச்னை மற்றும் தொடர் மின்வெட்டால் மாணவர்கள், குழந்தைகள், பொதுமக்கள், வயதானவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கீரப்பாக்கம் ஊராட்சியில் குறைந்த மின்னழுத்த பிரச்னை மற்றும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதனை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கீரப்பாக்கம் ஊராட்சி துலுக்கானத்தம்மன் கோயில் தெரு மற்றும் முத்தாலம்மன் கோயில் தெருக்களில் காலம், காலமாக பூர்வீகமாக குடியிருந்து வரும் 300க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதேபோல், கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் இருளர்கள் குடியிருந்து வரும் விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோயில் தெரு, ஊமை மாரியம்மன் கோயில் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில், குறைந்த மின்னழுத்த பிரச்னை கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால், வீடுகளில் உபயோகிக்கப்பட்டு வரும் டிவி, மிக்சி, கிரைண்டர், பேன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்து நாசமாகி வருகின்றன. அது மட்டுமல்லாமல் தினந்தோறும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகின்றது.
இதில், 5 நிமிடம் மழை பெய்தாலே மணி கணக்கில் மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால், மாணவர்கள் படிக்க முடியாமல் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்வெட்டு பிரச்னையால் கொசுக்கடி தாங்க முடியாமல் பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில் இருந்து முத்தாலம்மன் கோயில் தெருவுக்கு செல்லும் பிரதான சாலை ஓரத்தில் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரும், விநாயகபுரம் பிரதான சாலை ஓரத்தில் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரும் அமைத்து குறைந்த மின்னழுத்த பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க வேண்டும்.
அதற்காக, எலும்பு கூடாக காட்சி அளிக்கும் மின்கம்பங்களை மாற்ற கோரியும் கடந்த 7 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்து வருகிறோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில், துலுக்கானத்தம்மன் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலை ஓரத்தில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக 2 மின்கம்பங்கள் நடப்பட்டன.
இதில், மின்கம்பங்கள் நடப்பட்டு 5 மாதம் ஆகியும் இதுவரை டிரான்ஸ்பார்மர் அமைக்கவில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு நேரில் வந்து ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழக முதல்வரிடம் நேரில் சென்று முறையிட உள்ளோம்’ என்றனர்.
* தெரு விளக்குகள் இல்லாததால் அச்சம்
கீரப்பாக்கம் ஊராட்சி விநாயகபுரம் பகுதியில் உள்ள தொட்டி மாரியம்மன் கோயில் தெருவில் இருந்து ஊமை மாரியம்மன் கோயில் தெரு செல்லும் பிரதான சாலை ஓரத்திலும், இதேபோல் விநாயகபுரம் 4வது தெருவில் இருந்து பாபா கோயிலுக்கு செல்லும் சாலை ஓரத்திலும் தெரு மின் கம்பங்கள் மற்றும் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து வரும் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் சமூகவிரோதிகளுக்கு பயந்து உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
* எம்எல்ஏ பரிந்துரை செய்தும் நடவடிக்கை இல்லை
கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னையை தீர்த்து வைப்பதற்காக 6 மற்றும் 7வது வார்டு பகுதியை இணைக்க கூடிய முத்தாலம்மன் கோயில் தெருவில் இருந்து துலுக்கானத்தம்மன் கோயில் தெரு செல்லும் பிரதான சாலை ஓரத்திலும், இதேபோல், விநாயகபுரம் பகுதியிலும் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்களை அமைக்க வலியுறுத்தி கிராம இளைஞர்கள், பொது நல அமைப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனிடம் மனு கொடுத்தனர். அதன்பேரில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு எம்எல்ஏ பரிந்துரை செய்தார். ஆனால், 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.