பட்டிவீரன்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே, மஞ்சள்பரப்பு என்னும் இடத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் புல்லாவெளி அருவி அமைந்துள்ளது. இதனைச் சுற்றி நீண்ட மலைத்தொடர், பரந்து விரிந்த பசுமையான வனப்பகுதி, எப்போதும் சில்லென்று வீசும் இளங்காற்று என இயற்கை எழில் நிறைந்த பகுதியாக உள்ளது. பார்க்க ரம்மியமாக இருக்கும் இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்வர்.
மலைப்பகுதியில் உள்ள பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, கும்பம்மாள்பட்டி, தடியன் குடிசை, கல்லாங்கிணறு உள்ளிட்ட மலைக் கிராமங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும்போது, அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். மலைப்பகுதிகளில் நீண்ட தூரம் ஆறாக பயணித்து புல்லாவெளியில் அருவியாக மாறுகிறது. சமீப காலமாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், அருவிக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. இனி வரும் மாதங்களில் மழை பெய்யும் பட்சத்தில் அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் என மலைக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.