சிவகங்கை: காதல் பிரச்னையில் பெண் தற்கொலை செய்ததால் அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சிவகங்கை அருகே தமறாக்கி கிராமத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் மனோஜ்பிரபு(29). தற்போது சிவகங்கை, காமராஜர் காலனியில் வசித்து உள்ளார். இவர், வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது நண்பர்களான ஹரிகரன், அஜித்குமார் ஆகியோருடன் இடையமேலூர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு டூவீலரில் சக்கந்திக்கு வந்து கொண்டிருந்தார்.
புதுப்பட்டி அருகே காரில் வந்த மர்ம கும்பல், டூவீலர் மீது மோதி அவரை கீழே தள்ளியது. பின்னர் அக்கும்பல் தப்பி ஓடிய மனோஜ்பிரபுவை விரட்டிச் சென்று சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. தகவலறிந்து சிவகங்கை நகர் போலீசார், மனோஜ்பிரபுவின் உடலை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக தமறாக்கியை (தெற்கு) சேர்ந்த அபிமன்யு, பூச்சிபிள்ளை, முருகன், மணி, முனீஸ்வரன் மற்றும் பெயர் தெரியாக 4 பேர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கொலை குறித்து போலீசார் தெரிவித்ததாவது: மனோஜ்பிரபுவின் தங்கை புவனேஸ்வரியை அபிமன்யு காதலித்து வந்தார். ஆனால், புவனேஸ்வரிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு நடந்த நிலையில் அபிமன்யு, காதலிக்கும்போது எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் இருந்து இருதரப்பிற்கும் தொடர்ந்து முன்விரோதம் இருந்து வந்த நிலையில், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மனோஜ்பிரபு கொலை நடந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர். இரு தரப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.