விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்த தொழிலாளி பால்ராஜ்(34). இவரது மனைவி நித்ய காமாட்சி(24). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகன் அஸ்வத்(7). மகள்கள் நீபாஸ்ரீ(5), புவி அக்சரா(3). மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட பால்ராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதுடன் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் நித்ய காமாட்சி கணவரிடம் அடிக்கடி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவார். இந்நிலையில் நேற்றிரவு குழந்தைகளை தூங்க வைத்து விட்டு நித்ய காமாட்சி தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் போதையில் வீட்டுக்கு வந்த பால்ராஜ், நித்ய காமாட்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து பால்ராஜ் அழுத்தினார்.
இதில் மயங்கிய நித்ய காமாட்சி தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டார். இதில் அவர் தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து பால்ராஜ் தனது கழுத்தை கத்தியால் அறுத்து கொண்டு மயங்கினார். இவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தனர். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். பால்ராஜை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நித்ய காமாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.