விருதுநகர்: காதல் திருமணம் செய்த ஜோடியை காரில் கடத்திய பெண்ணின் தாய், தாய்மாமன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (21). இவர், சிவகாசி அருகே தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் வெம்பக்கோட்டை கொங்கன்குளத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி (19)யும் காதலித்துள்ளனர்.
வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கடந்த மாதம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, சிவகாசி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், கிருஷ்ணவேணியின் தாய் அய்யம்மாள் (48), தாய்மாமன் ஜெயகுமார் (51) உள்ளிட்டோர், அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று, இருவரையும் சேர்த்துக் கொள்வதாக கூறி காரில் அழைத்துச் சென்றனர்.
காரை பழனிச்சாமியின் நண்பர்கள் பின் தொடர்ந்து, டூவீலரில் சென்றனர். கார் தாயில்பட்டி செல்லாமல் தென்காசி சென்றதால், சந்தேகமடைந்த நண்பர்கள், வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் காதல் ஜோடியை தேடிச் சென்றனர். தகவலையடுத்து தென்காசி போலீசார் இரவு 8 மணியளவில் குருவிக்குளம் பகுதியில், காரை மடக்கி காதல் திருமண ஜோடியை மீட்டு, வெம்பக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வீட்டில் சேர்த்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அய்யம்மாள், தாய்மாமன் ெஜயகுமார், உறவினர்கள் மணிகண்டன் (22), வேல்முருகன் (22), சிவசுடலை ஆகியோர் காரில் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கிருஷ்ணவேணியின் தாத்தா பாலகிருஷ்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தாயில்பட்டியில் உள்ள பழனிச்சாமியின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் காதல் திருமண ஜோடியை போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது.