மீரட்: கணவரை கொன்று ட்ரம்மில் போட்டு சிமென்ட் கலவையால் மூடிய மனைவி தற்போது சிறையில் கர்ப்பமாக இருக்கும் நிலையில், தனது வக்கீல் மீது நம்பிக்கை இல்லாததால் சட்டப் படிப்பு படிக்க அனுமதி கேட்டு அடம் பிடித்து வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த பிரமோத் – கவிதா தம்பதியின் மகள் முஸ்கான் ரஸ்தோகி, அதே நகரைச் சேர்ந்த சவுரவ் சுக்லாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் முஸ்கானுக்கு ஷாஹில் சுக்லா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து சவுரவை கொலை செய்தனர்.
முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு முதல் லண்டனில் கப்பல்துறையில் பணி புரிந்த சவுரவ் சுக்லா, கடந்த மார்ச் 4ம் தேதி மீரட் வந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் அவர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை. அவரைக் காணவில்லை எனப் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் தொடர் விசாரணையில், சவுரவ் மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஷாஹில் சுக்லாவும் சேர்ந்து சவுரவை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. கத்தியால் குத்தி கணவரைக் கொலை செய்ததாகவும், பின்னர் உடலை ஷாஹில் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி ஒரு ட்ரம்மில் போட்டு அதில் சிமென்ட் கலவையைப் ஊற்றி மூடியதாகவும் வாக்குமூலம் அளித்தனர். அதையடுத்து முஸ்கான் ரஸ்தோகி அவரது காதலர் ஷாஹில் சுக்லாவைக் கைது செய்து போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை வழக்கில் தங்களின் மகள் இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர் என்றும், அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெற்றோர் தங்களது மருமகனுக்காக நீதி கோரியுள்ளனர். இவ்வழக்கு மீரட் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட முஸ்கான் ரஸ்தோகி, தனது வழக்கை தானே வாதாட விரும்புவதாகவும், அதற்காக சட்டப் படிப்பை பயில அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய வழக்கறிஞர் மீது தனக்கு சார்பாக வாதாடவில்லை என்றும், அவரது செயலால் தான் அதிருப்தி அடைந்து இருப்பதாகவும், தனது வழக்கை தனியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது முஸ்கான் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
முஸ்கான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதால், சட்டப் படிப்பை தொடர, முதலில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) மூலம் அவர் படிப்பைத் தொடரலாம் என்றும், சிறை அதிகாரிகள் தேவையான வசதிகளை வழங்குவார்கள் என்றும் சிறை கண்காணிப்பாளர் விரேஷ் ராஜ் ஷர்மா கூறினார். முஸ்கனின் பெற்றோர்களான கவிதா மற்றும் பிரமோத் ரஸ்தோகி ஆகியோர் தங்களது மகளுக்கு எதிராக சாட்சியமளித்துள்ளதால், அவர்களின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. சிறையில் வழக்கமான மருத்துவ பரிசோதனையின் மேற்கொண்ட போது முஸ்கான் தற்போது கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.